மிளகாய் பச்சையாகவும், வத்தலாகவும் கிடைக்கும். மிளகாயைச் சாதாரணமாக சமையல் வகைகளுக்குத்தான் உபயோகிக்கிறோம் என்றாலும், மிளகாயைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தலாம்.
1.தலைவலி தீர
மிளகாய், மிளகு, செம்மண் மூன்றையும் சமஅளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைபோல அரைத்துக் கொதிக்க வைத்து, இளஞ் சூடாகப் பற்றுப்போடத் தலைவலி குணமாகும்.
2. காது நெகிழ்ச்சி அல்லது வலி
*கொஞ்சம் நல்லெண்ணெயை ஒரு சிறிய கரண்டியில் ஊற்றி அதில் ஒரு மிளகாயைக் கிள்ளிப் போட்டுச் சூடேற்றி நன்றாகச் சிவந்த வுடன் அந்த எண்ணெயில் பொறுக்கும் சூட்டுடன் சில துளிகள் காதில் விட்டுப் பஞ்சினால் அடைத்து வைக்கக் குணம் தரும்.
* ஒரு மிளகாயை எடுத்துத் தலைப்பக்கம் காம்புடன் சிறிது தூரம் கிள்ளிவிட்டு, உள்ளே உள்ள விதைகளை எல்லாம் சுத்தமாகத்தட்டி எடுத்துவிட்டு, அதில் கொஞ்சம் நல்லெண்ணெயை விட்டு, அதை நெருப்பின் மேலாவது அல்லது விளக்கின் ஒளியின் மீதாவது காண்பித்துச் சூடேற்றிப் பொறுக்கும் சூட்டுடன் காதில் மூன்று துளி விட்டு, பஞ்சினால் அடைத்து வைக்கக் குணம் தரும்.
3. நீர் அடைப்பு, நீர்க் குத்துக்கு
10 கிராம் மிளகாயுடன், ஒரு பிடி பிரண்டை யைச் சேர்த்துப் புதுச்சட்டியில்போட்டுக் கருக வறுத்து, தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொண்டு வடிகட்டி, காலை மாலை மூன்று நாள் சாப்பிடக் குணம் தரும்.
4. வயிற்றுக் கட்டி எடுக்க மிளகாய் 1 பிடி, பிரண்டை 1 பிடி, உப்பு 2 பிடி இவைகளைத் தண்ணீர் விட்டு மைபோல அரைத்து. உடம்புக்கு ஏற்றபடி ஓர் எலுமிச்சங்காய் அளவு அல்லது அதற்குக் குறைத்து 3 நாள் காலையில் சாப்பிடக் குணம் தரும். சாப்பாடு கஞ்சி மட்டும்.
5.காயம் ஆற
மிளகாய், உப்பு சரி எடை தூள் பண்ணி வேப்பெண்ணெயில் வதக்கிக் கட்டினால் காயம் ஆறும்.
6.நரை,உஷ்ணம், மேகநீர், பார்வை மங்கல், பார்வைக் குறைவு முதலானவைகளுக்கு
100 கிராம் பிளகாய் வற்றலை அம்மியில் வைத்துத் தண்ணீர் விட்டு மைபோல் அரைத்து முக்கால் ஆழாக்கு நல்லெண்ணெயில் போட்டு சந்தனம்போலக் கரைத்து, இரும்புச் சட்டியில் விட்டு, பொன்னிறம் வரும்வரை காய்ச்சி இறக்கி, இளஞ்சூடாகத் தலை, உடல் முழுவதும் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும். இவ்விதம் வாரம் இருமுறை செய்யக் குணம் தரும்.
7. அண்டவாய்வுக்கு
மிளகாய் ஒரு பங்கு, கழற்சி இலை 2 பங்கு எடுத்து அரைத்து, கொட்டைப்பாக்களவு. உருண்டை செய்து சாப்பிட்டு பெட்டைக்கோழி ரசம் வைத்து, முதலில் கறியைச் சாப்பிட்டு அதன் பின்கோழி ரசம் சாப்பிட வேண்டும். பிறகு வழக்கம்போல் சாப்பிடக் குணம் தரும்.
8.நரம்புச் சிலந்திக்கு
மிளகாயை நன்றாக அரைத்துக் கட்டவும், காலை, மாலை இவ்விதம் செய்ய நரம்பு அறுந்து விழும். எரிச்சல் இராது. பயப்பட வேண்டியதில்லை.
குறிப்பிட்டுள்ள மருந்துகளை ஆயுர்வேத / சித்த / ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனையின்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
Comments