வீட்டு வைத்தியம் (உப்பு)

 

    உப்பு ஒரு விளைபொருள். கடல் நீரினின்றும் உப்பை எடுக்கிறார்கள். உப்பு, உணவு வகைகளில் முக்கிய ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது. உப்பு உணவு வகைகளுக்கு மட்டுமே உபயோகப் படுவதாகச் சாதாரணமாக நினைத்து விடுகிறோம். ஆனால், உப்பு மருந்து வகைகளிலும்கூடச் சேர்க்கப்படுகிறது. 

1.வயிற்றில் உள்ள கட்டி எடுக்க: 

* ஒரு பிடி உப்பை எடுத்து மாலையில் அதற்குத் தகுந்த தண்ணீரில் கரைத்து வைத்திருந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியது. வாந்தி எடுக்காதபடி வாயில் அரிசி போட்டு மென்று விழுங்கலாம். இது வயிற்றைக் கலக்கிப் பேதி ஏற்படச் செய்யும். அளவு மீறிப் பேதியாவதாகத் தெரிந்தால் புளித்த மோர் குடிக்கக் கொடுத்தால் பேதி நின்றுவிடும். அன்றைய தினம் கஞ்சிச் சாப்பாடு சாப்பிடவும். குணங் காணவில்லை யானால், மூன்றுநாள் கழித்து மறுமுறை சாப்பிட வேண்டும். இதனால் குணம் ஏற்படும்.

*தேங்காயின் கீற்றில் ஒன்றை உப்புக்குள் அமிழ்த்தி வைத்து மறுநாள் அந்தக் கீற்றை எடுத்துச் சாப்பிட வேண்டும். இவ்விதம் மூன்று நாள் சாப்பிடக் குணமாகும். 

*2 பிடி உப்பை, ஒரு பிடி பிரண்டை, ஒரு பிடி மிளகாயுடன் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சங்காயளவு அல்லது அதற்குக் குறைத்து 3 நாள் சாப்பிடக் குணமாகும்.

 2.காயம் ஆற

உப்பு, மிளகாய் சரி எடை எடுத்துத் தூள் செய்து வேப்ப எண்ணெயில் நன்றாக வதக்கிக் கட்ட காயம்பட்ட புண் ஆறும். 

3. முள் குத்தின வலிக்கு:
 
உப்பு, மிளகாய் சரி எடை எடுத்து நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வலி தீரும். 

4. பல் வலிக்கு: 

உப்பைச் சட்டியில் போட்டு வறுத்து இளஞ்சூடாக வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் ஒத்தடம் கொடுக்க வலி தீரும். 

5.எகிர் வீக்கம், பல் வலிக்கு: கொஞ்சம் உப்பையும், புளியையும் எடுத்து இரண்டையும் நன்றாகக் கசக்கி ஒன்று சேரச் செய்து, அதை வீக்கம் அல்லது வலியுள்ள பாகத்தில் வைத்து, வாயை மூடிக்கொண்டு கால்மணி நேரம் இருக்க வேண்டும். வாயில் ஊறும் எச்சிலை, புளி விழுந்துவிடாமல் கீழே துப்பிவிடலாம். கால் மணிக்குப் பின் பச்சைத் தண்ணீரைக் கொண்டு வாயை நன்றாகக் கொப்பளித்துவிட வேண்டியது. இவ்விதம் ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும், குணமடைந்து விடும்.

 * ஒரு பாட்டில் தண்ணீரில் ஒரு பிடி உப்பைப் போட்டு நன்றாகக் கலக்கிக் கொண்டு, அதில் ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தொண்டைக் கட்டு, குரல்வளை வியாதி, கக்குவான் ஆகியவற்றுக்குத் தொண்டையில் வைத்துக் கொப்பளிக்கக் குணம் தரும். 

6.வீக்கம், இரத்தக் கட்டுக்கு: உப்பு, புளி சம எடை எடுத்து, கொஞ்சம் தண்ணீ
ர் விட்டுக் குழம்புப் பதமாகக் கொதிக்க வைத்து, தேவையான இடத்தில் பற்றுப் போட வீக்கம், இரத்தக் கட்டு இவை குணமாகும். 

7.நாய்,பூனை,பூரான், எலி, செய்யான், பெருச்சாளி, மூஞ்சூறு விஷங்களுக்கு 

உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு, இம்மூன்றையும் சம எடை சேர்த்து, தண்ணீர் விட்டு மைபோல் அரைத்துக் கடிவாயில் தேய்த்துவர விஷம் நீங்கும். 

8. சொட்டை விழுந்த மண்டையில் முடிமுளைக்க 

உப்பை நன்றாகத் தூள் செய்து தினசரி 3 அல்லது 4 வேளை தேய்த்துவர முடி முளைக்கும். 

9.காதில் எறும்பு அல்லது சிறுபூச்சி புகுந்து விட்டால் 

உப்பைக் கொஞ்சம் எடுத்துத் தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரில் கொஞ்சம் காதில் விட, சில நிமிஷத்தில் எறும்பு அல்லது பூச்சி வெளியே வந்துவிடும். 

10. பித்தம் வாந்தி எடுக்க 


ஒரு பிடி உப்பை ஒரு பிடி முருங்கைக் கீரையுடன் போட்டுத் தட்டி, அதன் சாற்றை எடுத்துக் குடிக்க வாந்தி எடுக்கும். அத்துடன் பித்தமும் வெளியேறும்.

குறிப்பிட்டுள்ள மருந்துகளை ஆயுர்வேத / சித்த / ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனையின்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Comments